General
தமிழ் வளர்த்த திருச்சி தமிழ்ச் சங்கம்.

தமிழ் வளர்த்த திருச்சி தமிழ்ச் சங்கம்.

திருச்சி தமிழ்ச் சங்கம் (Trichy Tamil Sangam).

பாண்டியநாடே பழம்பதி என்று சிறப்பிக்கப்படும் மதுரை மாநகரில் முதல் தமிழ் சங்கம் இருந்தது. இதனை சோமசுந்தர கடவுளே நிறுவியதாக கூறப்படுகிறது. அடுத்ததாக கபாடபுரத்தில் இடைக்கால தமிழ் சங்கம் இருந்தது. இதனை குன்றம் எறிந்த குமரவேல் நிறுவியதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னர் மாட மதுரையில் கடை தமிழ் சங்கம் நக்கீரரால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு இதே மாட மதுரையில் வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் நான்காம் தமிழ் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சாவூரில் வழக்குரைஞர் உமாமகேஸ்வரன் பிள்ளை, கரந்தை தமிழ் சங்கத்தை நிறுவினார். இவற்றின் தாக்கமாக திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தை துரைராச பிள்ளை என்பவர் நிறுவினார். இவர் தஞ்சாவூரை அடுத்த கரந்தட்டாங்குடியில் 02.03.1910 ஆம் நாளில் பிறந்தவர். சட்ட மேலவை உறுப்பினராக எட்டு ஆண்டுகள் பணிபுரிந்த இவர் தான் திருச்சி தமிழ் சங்கத்தை நிறுவியவர்.

திருச்சி தமிழ் சங்கம் உருவான வரலாறு (History of Trichy Tamil Sangam):

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் திருச்சியில் குறள் அன்பர்கள் குழு இயங்கி வந்தது. திருச்சி (Trichy) ப்ரோமெனெடு தெருவில் இருந்த கு.விஸ்வநாதன் என்பவர் இல்லத்திலும், பின்னர் தி.செ.மு.அ பாலசுப்பிரமணியம் செட்டியார் இல்லத்திலும் இக்குழு கூடி திருக்குறள் சிந்தனைகளை பரப்பி வந்தது. இந்த குழுவை துரைராசபிள்ளை முன்னின்று நடத்தி வந்தார். இதன் தொடர்ச்சியாக, திருவள்ளுவர் ஆண்டு 1987 மார்கழி மாதம் 26 ஆம் நாளில், (04/01/1956) கு.விஸ்வநாதன் இல்லத்தில் கூடி, திருச்சியில் தமிழ் கல்லூரியையும், தமிழ் சங்கத்தையும் அமைக்க வேண்டும் என குறள் அன்பர்கள் குழு முடிவு செய்தது.

இதன்படி 11.03.1956 ஆம் நாளில் ஸ்ரீரங்கத்தில் உள்ள வாசுதேவபுரம் ராஜபவனத்தில் மாணிக்கவாசகம் பிள்ளை தலைமையில் கூடிய கூட்டத்தில், துரைராசபிள்ளை முன்மொழிய திருச்சி தமிழ் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த சங்கத்தின் முதல் தலைவராக பாலசுப்ரமணியம் செட்டியார் பதவியேற்றார். துணைத் தலைவராக அய்யம்பெருமாள் என்பவரும், செயலராக துரைராசபிள்ளை, பொருளாளராக சுப்பையா செட்டியார் ஆகியோர் பதவியேற்றனர். அரசு சங்க சட்ட விதிகளின்படி, 03.12.1956 இல் ஆவணக்களத்தில் சங்கம் பதிவு செய்யப்பட்டது.

திருச்சி தமிழ் சங்க கட்டிடத்தின் வரலாறு (History of Trichy Tamil Sangam Buildings):

திருச்சி தமிழ் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக இடம் தேடும் பணியில் துரைராசபிள்ளை ஈடுபட்டு, அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஜனாப் குலாம் முகமது பாஷாவிடம் இடம் கோரி பரிந்துரை செய்தார். திருச்சி மேலரண் சாலையில் கெயிட்டி திரையரங்கத்துக்கு முன்பு இருந்த இடத்தை 25.08.1959 இல் திருச்சி தமிழ் சங்கம் கட்ட தமிழக அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான கால்கோள் விழா 17.09.1959 இல் நடைபெற்றது. 07.05.1961 இல் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த இரு விழாக்களிலும் அப்போதைய தமிழக அரசின் முதல்வர் காமராஜர் பங்கேற்று சிறப்பித்தார். இதன் தொடர்ச்சியாக அமைக்கபட்ட தமிழ் சங்க நூல் நிலையத்தை கல்வி அமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலம் 28.09.1961 இல் திறந்து வைத்தார். 1970 இல் சங்கத்தின் தென்புறத்தில் புதிய கட்டடம் கட்டப்பெற்றது. 1990 இல் சங்க புதிய கட்டிடத்தில் முதல் தளம் அமைக்கப்பட்டது. 2000 இல் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. 2014 இல் இரண்டாம் தளம் கட்டப்பட்டு ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் அரங்கம் கட்டப்பட்டது.

ஆளுமைகளுக்கு சிறப்பு:

திருச்சி தமிழ் சங்கமானது (Trichy Tamil Sangam) பல்வேறு ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்த்துள்ளது. தமிழறிஞர் கி.ஆ.பெ விஸ்வநாதனுக்கு முத்தமிழ்க் காவலர் என்னும் விருது வழங்கியது. பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, எம்.பக்தவத்சலம், ராஜா சார் முத்தையா செட்டியார், நீதியரசர் சிங்காரவேலன், திருமுருக கிருபானந்த வாரியார், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை அழைத்து கவுரவித்து பெருமை சேர்த்துள்ளது.

12 men are seen standing on the stage and one of them is handing over a big cheque leaf to another person

தொடரும் தமிழ் பணி:

சங்கம் தோற்றுவித்த நாளில் இருந்து 62 ஆண்டுகளாக இடைவிடாது தமிழ்ப் பணியாற்றி வருகிறது. ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்குவதை கடமையாகக் கொண்டுள்ளது. 1973 முதல் ஆண்டுதோறும் கம்பருக்கு புகழ் விழா நடத்தப்பட்டு வருகிறது. 1974 இல் தமிழிசை விழாவை நடத்தியது. 1975 இல் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. இவரது 200 வது ஆண்டில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நூல்களை மூன்றாவது முறையாக (2015 ல்) அச்சிட்டு வழங்கியது. ஆய்வரங்கங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும், பத்து மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்குகிறது. இலக்கண ஆசிரியர்கள், காப்பிய புலவர்கள், புராண மேதைகள், பிரபந்த விற்பன்னர்கள், சைவ சமய நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் என வேறுபாடின்றி அனைத்து புலவர்களுக்கும் விழா எடுத்து சிறப்பித்து வருகிறது. வாரம்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் சங்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் அனைத்து மாணவர்களுக்கும் நீதி நூல்களை வழங்கி போட்டி நடத்தி பரிசு வழங்கி வருகிறது.

நினைவுச் சிலை:

திருச்சி தமிழ் சங்கத்தை நிறுவிய துரைராசபிள்ளை 14/10/1975 இல் காலமானார். இவரது நினைவாக சங்க வளாகத்தில் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 14/10/1979 இல் இந்த சிலையை மருத்துவ மேதை ஜி.விஸ்வநாதபிள்ளை திறந்து வைத்தார். இத்தகைய சிறப்புகளை தன்னகத்தே கொண்டு திருச்சியில் தமிழுக்கான கலைக்கோவிலாக நிமிர்ந்து நிற்கிறது தமிழ் சங்கம்.

தமிழ் சங்க தலைவர்கள் பட்டியல்:

தெ.மு.அ.பாலசுப்பிரமணியன் செட்டியார் ( 11/03/1956 – 02/10/1956 )
எட்வர்டு பால் மதுரம் ( 1956 – 1971 )
ஆர்.கிருஷ்ணசாமி செட்டியார் ( 1971 – 1980 )
ந.சுப்பிரமணியம் செட்டியார் ( 1980 – 1992 )
அரு.அண்ணாமலை செட்டியார் ( 1992 – 2007 )
சிவ.ப.மூக்கப்பிள்ளை ( 2007 ஆம் ஆண்டு முதல் )

தமிழ்ச் சங்க அமைச்சர்கள்:

துரைராச பிள்ளை (1956 – 1975 )
பெரியசாமி பிள்ளை (1975 – 1988 )
ஆவிச்சி செட்டியார் ( 1998 – 2002 )
சிவக்கொழுந்து (2002 ஆம் ஆண்டு முதல் )

தமிழ்ச் சங்க பொருளாளர்கள்:

சுப்பையா செட்டியார் (1956 – 1959 )
ஆவிச்சி செட்டியார் (1959 – 1998 )
தனேந்திரன் ( 1998 ஆம் ஆண்டு முதல் )

இத்தகைய பெருமைகளை பெற்ற திருச்சி தமிழ்ச் சங்கம் அது தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழை வளர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.!

Leave a Reply

Copyright 2023 Tiruchirapalli | All Rights Reserved.