General
திருச்சி ரயில்வே வரலாறு

திருச்சி ரயில்வே வரலாறு

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உள்ள ‘போக்குவரத்து’ பொறுத்தே அமைகிறது. தமிழகத்தை ஆட்சி செய்த அரசர்களுக்கென சிறப்பான வரலாறு இருப்பது போல, போக்குவரத்துக்கும் வரலாறு உண்டு. அதிலும் ரயில் வரலாறு மிக முக்கியமானது மற்றும் சுவாரசியமானது ஆகும். இந்தியாவில் ஒரு நாளில் 14,000 பயணிகள் ரயில் இயக்கப்படுவதாகவும், அதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு கோடியே நாற்பது லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மக்களுக்காக சேவை செய்யும் இந்த ரயில்வே துறையில் ஏறக்குறைய பன்னிரண்டு லட்சம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். உலகின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் முதல் பெரிய பொதுத்துறையான ரயில்வே நிர்வாகம் பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு விதமாக வளர்ந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லா வளர்ச்சிக்கும் பின்னால் பலரின் அறிவும், உழைப்பும் கொட்டிக்கிடக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இங்கு நாம் தமிழகத்தின் புகழ்பெற்ற மாநகரமாக விளங்கும் திருச்சிராப்பள்ளியின் ரயில்வே கோட்டம் (thiruchirapalli railway division) பற்றி சுருக்கமாக காணலாம்.

பொதுவாகவே திருச்சி மாநகருக்கும், ரயிலுக்கும் நிறைய சுவாரசியமான தொடர்புகள் உண்டு. அந்தக்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் ரயிலின் மீது அதிக சிநேகம் கொண்டிருந்தார்கள். ரயில் வந்து நிற்கும் இடத்தை கூட ரயிலடி என்றே அழைத்தனர். மேலும் இங்கு உள்ள மக்கள் பலரது வாழ்விலும் விளக்கேற்றியதே இந்த ரயில் என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு விவசாயம் தாண்டி கைத்தறி, சுருட்டு, பீடி சுற்றுதல் போன்ற குடிசை தொழில்களுக்கு அடுத்த படியாக ரயில்வே துறை தான் பல குடும்பங்கள் ஒரு வேலை உணவு உண்பதற்கு காரணமாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

“திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம்” தெற்கு ரயில்வேயின் ஆறு பிரிவுகளில் ஒன்றாகும். தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி பிரிவு 01.16.1956 இல் உருவாக்கப்பட்டது. இது தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலத்திற்கு சேவை செய்கிறது. தெற்கு ரயில்வேயின் மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது திருச்சிராப்பள்ளி பிரிவு நீண்டகாலமாக போற்றப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. தெற்கு ரயில்வே உருவாவதற்கு முன்பு, திருச்சிராப்பள்ளி தி தென்னிந்திய ரயில்வேயின் தலைமையகமாக இருந்தது. தென்னிந்திய ரயில்வே ஜூலை 1874 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பிரிவில் ஆம் ஆண்டில் முதல் முதலாக நாகப்பட்டினத்தில் இருந்து ஈரோடு வரை முதல் இருப்பு பாதை நிறுவப்பட்டது. இது முதலில் பிராட் கேஜில் முடிக்கப்பட்டு (1875-1879) பின்னர் வந்த காலமான இல் மீட்டர் கேஜ் ஆக மாற்றப்பட்டது என்பது சுவாரஸ்யமானது.

முக்கிய அம்சங்கள்:

திருச்சிராப்பள்ளி பிரிவு தமிழகத்தின் வளமான நிலப்பரப்புகளில் ஒன்றாகும். பசுமையான காவிரி ஆறு இதன் வழியாக பாய்கிறது. தென்னகத்தின் தானியக் களஞ்சியம் என்று சிறப்பிக்கப்படும் தஞ்சாவூர் இந்த பிரிவில் தான் அமைந்துள்ளது. எனவே தானியங்கள் ஏற்றுமதி இந்த பிரிவின் கீழ் தான் நடைபெறுகிறது. மேலும் உலகளவில் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு சிறப்பு பெற்ற கோவில்களும் இந்த பிரிவின் கீழ் உள்ள நகரங்களில் தான் அமையப்பெற்றுள்ளது. எனவே எண்ணற்ற சுற்றுலா பயங்கிகள் வந்து செல்லும் முக்கிய இடமாக திருச்சிராப்பள்ளி திகழ்கிறது.

கோவில்கள் நிறைந்த பகுதி:

திருச்சிராப்பள்ளி பிரிவு கோவில்கள் நிறைந்த பகுதி என்பதால் ‘யாத்ரீகர்களின் சொர்க்கம்’ என்று கருதப்படுகிறது. இந்திய ரயில்வேயின் இந்த பிரிவு எண்ணற்ற வரலாற்று யாத்திரை மையங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருவானைகோவில், திருவாரூர், திருநள்ளாறு (காரைக்கால்), திருவாரூர், கடலூர் ஆகியவை முக்கியமானதாகும். மேலும் சர்வதேச அளவில் பிரபலமான அரவிந்தர் புதுச்சேரியில் உள்ள ஆசிரமம் இந்தப் பிரிவில் அமைந்துள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும் ரயில்வேயால் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் கோயில்களுக்கு வரும் யாத்ரீகர்கள் ரயில்களை பயன்படுத்துகின்றனர். முக்கியமான கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருமானத்தை வழங்கும் பிரிவாக திருச்சிராப்பள்ளி பிரிவு விளங்குகிறது.

திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் இயற்பியல் அம்சங்கள்:

திருச்சிராப்பள்ளி பிரிவு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தெற்கு ஆற்காடு, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்கள்
சமீபத்தில் பிரிக்கப்பட்ட பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். இது தோராயமாக மொத்தம் 1026.55 கி.மீ ரயில் பாதையை கொண்டது. இது மீட்டர் கேஜ் இல் இருந்து தற்போது பிராட் கேஜ் ஆக மாற்றப்பட்டதுடன், பல்வேறு வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த கோட்டத்தின் கீழ் மொத்தம் 152 ரயில் நிலையங்கள் செயல்படுகின்றன.

பாசஞ்சர் ரயில் போக்குவரத்து:

இந்த பிரிவு ஒவ்வொரு மாதமும் சுமார் 34 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இது தினமும் சராசரியாக 166 பயணிகள் ரயில்கள் மூலம் போக்குவரத்தை வழங்குகிறது.

ஒரு நாளைக்கு சுமார் 1.13 லட்சம் பயணிகளுக்கு பயணிக்கும் வசதியை வழங்குகிறது. முக்கியமான பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில், பயணிகளின் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதுடன், தற்போதுள்ள ரயில்களுடன் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.

சரக்கு போக்குவரத்து:

இந்த பிரிவு முதன்மையாக நிலக்கரி, லிக்னைட், சிமெண்ட், உணவு ஆகியவற்றின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகள், சுகர் மில்கள் மற்றும் பல தொழிற்சாலைகளுக்கு தேவையான சரக்குகளையும், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் சரக்கு போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. சரக்கு போக்குவரத்து மூலமும் ரயில்வே துறைக்கு நல்ல வருமானத்தை இந்த ரயில்வே கோட்டம் வழங்குகிறது.

பொன்மலை ரயில்வே பணிமனை (ponmalai railway workshop in trichy)

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் மற்றொரு விஷயம் “பொன்மலை ரயில்வே பணிமனை” ஆகும். இது 1928 ஜனவரி மாதம் 16 ஆம் தேதி திருச்சிக்கு அருகில் துவங்கப்பட்டது. இந்த பணிமனையில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு, என்ஜின் தயாரிப்பு, ரயில் என்ஜின் பராமரிப்பு, சரக்கு பெட்டிகள் பராமரிப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிமனை மூலம் இங்குள்ள பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்த பொன்மலை பகுதியில் இதனை சார்ந்து சுமார் 2400 குடியிருப்புகளும், மருத்துவமனைகளும், பள்ளிகளும், விளையாட்டு மைதானங்களும், சந்தைகளும், எல்லா மதக் கோயில்களும் அமைந்துள்ளன. திருச்சி முழுவதும் அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என்று எல்லாத் தளங்களிலும் பொன்மலை ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது.

நிலைய மேம்பாடுகள்:

திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்கள் தற்போது மாதிரி நிலையங்களாக மேம்படுத்தப்பட்டு அதிநவீன வசதிகளுடன் பயணிகளுக்கு சேவைகளை வழங்குகிறது.

” டச் அண்ட் ஃபீல் ” கருத்தின் கீழ், பின்வரும் ஒன்பது ரயில் நிலையங்கள், நவீன ரயில் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி சந்திப்பு.
தஞ்சாவூர் சந்திப்பு
புதுச்சேரி
கும்பகோணம்
விருத்தாசலம் சந்திப்பு.
மயிலாடுதுறை சந்திப்பு.
திருவாரூர் சந்திப்பு.
நாகப்பட்டினம்.
ஸ்ரீரங்கம்.

இந்திய இரயில்வே துறையின் கீழ் வரும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையம் (Thiruchirapalli junction railway station) இப்போது நவீனமயமாகியுள்ளது. பயணிகளுக்கு நவீன மற்றும் மேம்பட்ட வசதிகளை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வே திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் பல வசதிகளை மேம்படுத்தியுள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்ட தளங்கள், சன் ஷேட் கொண்ட பாதை, அணுகல் சாலை மற்றும் அதிநவீன ஐ.ஆர்.சி.டி.சி ஓய்வு அறைகளுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Copyright 2023 Tiruchirapalli | All Rights Reserved.